

சுகாதார ஊழியர்களை வீட்டுக்கே வரவழைத்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது தொடர்பாக போபால் எம்.பி. பிரக்யா தாகூரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
பிரக்யா சிங் தாகூர், இவர் கடந்த 2006 மலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகிய சேர்க்கப்பட்டவர். 2019 மக்களவைத் தேர்தலில், போபால் தொகுதியில் போட்டியியட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், 2021 ஜனவரியில், அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரினார். மும்பை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் தாகூரை நேரில் ஆஜாரகுவதில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளித்து உத்தரவிட்டது.
ஆனால், அதன் பின்னர் அவ்வப்போது அவர் சகஜமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாவது அதன் நிமித்தமாக சர்ச்சைகளை எதிர்க்கட்சிகள் கிளப்புவதும் வாடிக்கையாக உள்ளது.
அண்மையில் அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாடும் வீடியோ வைரலானது. தற்போது, அவர் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி வந்து கரோனா முதல் டோஸ் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
அந்த வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திரா சலூஜா, "நமது போபால் எம்.பி. பிரக்யா தாகூர் சில தினங்களுக்கு முன்னர் கூடைப்பந்து விளையாடினார், திருமண நிகழ்வில் நடனமாடினார். ஆனால், அவரால் தடுப்பூசி போட்டுக் கொள்ள மட்டும் வீட்டைவிட்டு வெளியே வர இயலவில்லையோ? பிரதமர் மோடி தொடங்கி முதல்வர் சிவ்ராஜ் சவுகான் வரை அனைவரும் மருத்துவமனை சென்றுதானே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்" என்று கிண்டலாகப் பதிவு செய்திருந்தார்.
இது குறித்து மாநில தடுப்பூசித் திட்ட தலைவர் சந்தோஷ் சுக்லா கூறுகையில், எல்லாம் விதிகளின்படி தான் நடந்துள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதேடி சென்று தடுப்பூசி வழங்கப்படுகிறது. உடல்நல பாதிப்புள்ளதால் பிரக்யா தாகூருக்கு இந்த சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது" என்று கூறினார்.