

மூத்த இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா இன்று (ஜூலை 15) தன் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் சங்கரய்யா. இவருடைய 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் கடந்த சில தினங்களாகவே வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், இன்று சங்கரய்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, குரோம்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அக்கட்சியின் நிர்வாகிகள் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
என்.சங்கரய்யாவுக்கு வைகோ பட்டாடை அணிவித்தும், மல்லிகை மலர் மாலை அணிவித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியுடனும், அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுடனும் வைகோ உரையாடினார்.