

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடனான தனது சந்திப்பு குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விளக்கியுள்ளார்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கம், தமிழகத்தில் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்து முறையே திரிணமூல், திமுக ஆட்சியை அமைக்க வழிவகுத்தவர் ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர். ஆனால், அதன்பின்னர் தேர்தல் உத்தி வகுப்பாளர் தொழிலைக் கைவிடுவதாகக் கூறினார்.
மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக, ஐபேக்கிலிருந்து விலகிய பின்னரும் பிரசாந்த் கிஷோர் அரசியல் தலைவர்களை சந்திப்பதை நிறுத்தவில்லை.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். பின்னர், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இரண்டு முறை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பு மிஷன் 2024 எனப்படும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது.
அந்த சலசலப்பு அடங்குவதற்குள், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், "பிரசாந்த் கிஷோர் என்னை இருமுறை சந்தித்தது உண்மையே. ஆனால், அரசியல் பற்றியோ, 2024 தேர்தல் பற்றியோ அல்லது குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றியோ எதுவும் பேசவில்லை. அதேபோல் நான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியாகும் தகவலும் உண்மையல்ல. பாஜகவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளையும் சேர்த்து 300 எம்.பி.,க்கள் பலம் இருக்கிறது. அங்கே தேர்தலுக்கு என்ன வேலை இருக்கப்போகிறது. நான் நிச்சயமாக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
பிரசாந்த் கிஷோரும் தீவிர அரசியலில் களம் இறங்குவாரா என்ற கேள்விக்குறி இருக்கிறது. ஏனெனில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து வெளியேறியபோது பிரசாந்த் தன்னை ஒரு தோல்வியடைந்த அரசியல்வாதி என்று சுய விமர்சனம் செய்திருந்தது கவனிக்கத்தக்கது.