

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (ஜூலை 14) தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை, கொப்பனாபட்டி அருகே மூலங்குடியைச் சேர்ந்தவர் நல்லான் மகன் கார்த்திக் (24). இவர், ஒரு சிறுமியை 2018-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து போலீஸார் கார்த்திக்கைக் கைது செய்தனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சத்யா இன்று தீர்ப்பளித்தார்.
அதில், ''குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் மீது பதிவு செய்யப்பட்ட 2 பிரிவுகளிலும் தலா ஒரு ஆயுள் தண்டனை என மொத்தம் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.1.5 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், அரசு வழக்கறிஞராக அங்கவி வாதாடினார். வழக்கை உரிய முறையில் புலன் விசாரணை செய்த அப்போதைய காவல் ஆய்வாளர் செந்தமிழ்செல்வி தலைமையிலான போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பாராட்டினார்.