

கரோனா தொற்று அதிகம் உள்ள தனது அண்டை நாடுகளுக்குத் தடுப்பூசி வழங்கி ஜப்பான் உதவியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் டோஷிமிட்ஷு கூறும்போது, “கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்தோனேசியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளோம். மூன்று நாடுகளுக்கும் 30 லட்சம் தடுப்பூசிகளை வழங்கினோம். கூடுதலாக கோவாக்ஸ் திட்டத்துக்கு 11 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. கம்போடியா, ஈரான், லாவோஸ், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் தடுப்பூசிகள் தரப்பட உள்ளன” என்றார்.
கரோனா நான்காம் அலையின் பரவல் தீவிரமாக இருந்ததன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கரோனா குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு தளர்த்தியது. ஆனால், தற்போது தலைநகர் டோக்கியோவில் மீண்டும் கரோனா அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி ஜப்பானில் தொடங்க உள்ளன.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.