

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்தார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபாலும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கம் மற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான உத்தியை பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் வகுத்துக் கொடுத்தது.
தமிழகத்தில் திமுகவும், மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும் அமோக வெற்றி பெற்றன. மற்ற இடங்களிலும் ஐபேக் நிறுவனத்தின் தேர்தல் கணிப்புகள் சரியாகவே இருந்தன.
இந்நிலையில், தேர்தல் உத்தி வகுப்பாளர் பதவியிலிருந்து தான் ஒதுங்கிக்கொள்வதாகவும் தான் தொடங்கிய நிறுவனத்தை தனது நண்பர்கள் நடத்துவார்கள் என்றும் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார்.
ஆனால், அண்மையில் அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்தார். இதனால், அவர் இன்னும் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை அமைக்க அவர் உத்திகளை வகுப்பார் என்றும் அந்தக் கூட்டணியின் வெற்றிக்காக தேர்தல் உத்திகளை வகுப்பார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் இன்று ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இது அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பு தேர்தல் உத்திக்கானதாக இருக்குமோ என்ற ஊகங்களையும் எழுப்புகிறது. இதற்கிடையில், விரைவில் பிரியங்கா காந்தி லக்னோ செல்லவிருக்கிறார். அதனை முன்னிட்டும் இந்த சந்திப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் செயலாளராகவும் இருக்கிறார்.
பாஜகவுக்கு எதிராக ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் தான் எப்போதும் பணியாற்றுவேன் என்று கிளப் ஹவுஸ் உரையாடல் ஒன்றில் பிரசாந்த் கிஷோர் பேசியிருந்தது நினைவு கூரத்தக்கது.