Last Updated : 12 Jul, 2021 07:42 PM

 

Published : 12 Jul 2021 07:42 PM
Last Updated : 12 Jul 2021 07:42 PM

பட்டுக்கோட்டை மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் சிறுவனை அடித்துக் கொன்றதாக புகார்: எலும்புக்கூடு தோண்டி எடுப்பு

பட்டுக்கோட்டை அருகே மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் சிறுவனை அடித்துக் கொன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இன்று அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டும்போது எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதியில் அவிஸோ மனவளர்ச்சி குன்றியோர் காப்பகம் உள்ளது. இந்தக் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறுவர், சிறுமிகள் தங்கியுள்ளனர். இந்தக் காப்பகத்தை முகமது ஷேக் அப்துல்லா என்பவர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் காப்பகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் 15 வயதுச் சிறுவனை முகமது ஷேக் அப்துல்லா அடித்தபோது அச்சிறுவன் இறந்ததால் காப்பகத்திலேயே யாருக்கும் தெரியாமல் குழிதோண்டிப் புதைத்துவிட்டதாகவும், மொழி தெரியாமல் வந்த பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதில் அப்பெண் இறந்ததாகவும், ஷேக் அப்துல்லாவின் மனைவி கலிமா பீவி, தமிழக முதல்வர், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் தரணிகா, மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர் நடராஜன், வருவாய்த் துறையினர் முன்னிலையில் இன்று காப்பகத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டினர்.

அப்போது கலிமா பீவி காட்டிய இடத்தில் தோண்டும்போது அங்கு எலும்புக்கூடு, மண்டை ஓடு ஆகியவை எடுக்கப்பட்டன. இதையடுத்து எலும்புக்கூட்டை அதிகாரிகள் சுகாதாரத் துறை மருத்துவர்களிடம் சோதனைக்காக ஒப்படைத்தனர். மேலும், போலீஸார் முகமது ஷேக் அப்துல்லா, அங்குள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x