

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை ஓரத்தில் இருந்த 12 மாடி கொண்ட கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 24ஆம் தேதி திடீரெனச் சரிந்தது. இந்த விபத்து அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விபத்துக்குள்ளான கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது. கட்டிடத்தில் சமீபநாட்களாகப் புனரமைப்புப் பணிகள் நடந்துவந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்ததால் அதன் மற்ற பகுதி அப்படியே நின்றது. இதனால் மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. எனினும் மீட்புப் படையினர் போராடிச் சிலரை மீட்டனர்.
இந்த நிலையில், புயல் அச்சம் உள்ளிட்ட காரணங்களுக்காகக் கட்டிடம் இடிக்கப்பட்டு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வந்தன. முதலில் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறப்பட்டுவந்த நிலையில், இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதில் 71 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 உயிர்களை பலிகொண்ட இவ்விபத்து, அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான கட்டிட விபத்தாகப் பார்க்கப்படுகிறது.