

இணையதளத்தில் புகார் அளிக்கும் முறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் புகார் பதிவேட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நியாய விலைக் கடைகள் தொடர்பான புகார்களை இணையவழியில் தெரிவிப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும், அதனால், எழுத்து மூலம் புகார்கள் தெரிவிக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இணைய வழியில் புகார் தெரிவிக்கும் நடைமுறையோடு, புகார் பதிவேட்டையும் வைத்து பொதுமக்கள் புகார் அளிக்க வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு இன்று (ஜூலை 10) உத்தரவிட்டுள்ளது.