

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கணாமலைப்பட்டி கல்குவாரிகளில் விதிமீறல்கள் நடைபெற்று வருவதாக, ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முக்கணாமலைப்பட்டி ஊராட்சியில் மேட்டுப்பட்டி, பாறைப்பட்டி, வேளாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.
இங்கு, அரசின் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை, அடிக்கடி விபத்துகளும் நடப்பதைத் தடுக்க வேண்டும் என, ஆட்சியரிடம் பொதுமக்கள் அண்மையில் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, முக்கணாமலைப்பட்டி ஊராட்சித் தலைவர் ஹாஜிமுகமது கூறுகையில், "முக்கணாமலைப்பட்டி பகுதியில் செயல்படும் கல்குவாரிகளில் அரசின் அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பல மடங்கு தோண்டப்பட்டு வருகிறது. படுபாதாளத்தில் இருந்து கற்கள் வெட்டி எடுப்பதற்கு அதிக அதிர்வை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருட்களை வைத்துப் பாறைகளைப் பிளப்பதால் மக்களுக்கும், கட்டுமானங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களும் தப்பவில்லை.
குவாரிகளால் கிராம சாலைகளும் சேதம் அடைகின்றன. நீர்வழிப் பாதைகள் அடைப்பட்டுள்ளதால் நீர்நிலைகள் வறண்டுவிடுகின்றன. குவாரிகளில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதையும் தடுக்க வேண்டும்.
எனவே, கனிமவளத் துறையின் விதிகளை மீறிச் செயல்படும் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினோம். அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தும் தீர்வு ஏற்படவில்லை. ஆட்சியரிடமும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கையைத் தெரிவித்துள்ளோம்" என்றார்.
இதுகுறித்து, கனிமவளத் துறை மாவட்ட உதவி இயக்குநர் ரமேஷ் கூறுகையில், "முக்கணாமலைப்பட்டி பகுதியில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்து, விதிமீறலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.