

டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 90 ஐபோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து 3 சரக்குப் பெட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி விமான நிலையம் வந்த நிலையில், அவை துணிகள் என்று கூறப்பட்டு விமான சரக்கு சுங்க ஏற்றுமதி ஆணையரகம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றைப் பரிசோதித்தனர். எக்ஸ்- ரே ஸ்கேனிங் பிரிவு அதிகாரி இதில் மாறுபட்ட பொருள் இருப்பதை உணர்ந்து எச்சரிக்கை விடுத்தார்.
அந்த சரக்குப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 12 ப்ரோ வகையிலான 90 ஐபோன்கள் அதில் மறைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. டெல்லி விமான நிலையத்தின் கொரியர் டெர்மினல் பகுதியில் இது கண்டறியப்பட்டது.
துபாயில் இருந்து இவற்றை அனுப்பியது யார், டெல்லியில் அவற்றை வாங்கும் நபர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் விசாரணையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.