

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகம் குறித்து அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஃபுளூரைடு நச்சுத் தன்மையற்ற குடிநீர் வழங்க ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் உருவாக்கப்பட்ட திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகும். 10 ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டபோதும் தற்போது வரை 2 மாவட்ட மக்களுக்கும் முழுமையாக, பாதுகாக்கப்பட்ட குடிநீர் சென்று சேரவில்லை. இதுபற்றி அண்மையில் விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், இத்திட்டம் குறித்து இன்று (9-ம் தேதி) நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தருமபுரி மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார்.
அதகப்பாடியில் அமைந்துள்ள ஒகேனக்கல் குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குளோரின் அறை ஆகியவற்றை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து பென்னாகரம் அடுத்த மடம், ஒகேனக்கல் ஆகிய இடங்களிலும் அவர் ஆய்வு நடத்தினார். மேலும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் குறித்துக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுக்குப் பின்னர், தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொறியாளர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிகளில் குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஒய்.பிரகாஷ் (ஓசூர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.