திமுகவில் இணைந்த மகேந்திரன்; லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திமுகவில் இணைந்த மகேந்திரன்.
திமுகவில் இணைந்த மகேந்திரன்.
Updated on
1 min read

மகேந்திரன் போன்றவர்கள் தேர்தலுக்கு முன்பே வந்திருந்தால் கொங்கு மண்டலத்தில் திமுக பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதிலிருந்து அவருடன் பயணித்தவர் மகேந்திரன். மருத்துவரான மகேந்திரன் தனி அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார். பின்னர், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். கட்சியின் ஆரம்பக்காலத் தலைவர்களில் ஒருவராக, துணைத் தலைவராக கமலுடன் இணைந்து பயணித்தார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், நேற்று (ஜூலை 08) மாலை 5 மணி அளவில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதேபோன்று, மக்கள் நீதி மய்யம் சார்பாக மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியாவும் திமுகவில் இணைந்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு நாம் வெற்றி பெற்றிருந்தாலும், கோவை, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாததை எண்ணி நான் இப்போது வருத்தப்படுகிறேன். மகேந்திரன் போன்றவர்கள் தேர்தலுக்கு முன்பே வந்திருந்தால் கொங்கு மண்டலத்தில் திமுக பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும். அந்தக் கவலை இல்லாதிருந்திருக்கும். இப்போது ஒன்றும் குறைந்துவிடவில்லை. லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக மகேந்திரன் வந்திருக்கிறார்" எனப் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in