

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குமரி மாவட்ட இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008-ல் வட மாநிலங்களிலிருந்து கன்னியாகுமரி கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் கன்னியாகுமரி பகுதியில் சோதனை நடத்தி வந்தனர். கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் 6.9.2008-ல் சென்னையிலிருந்து வந்த அரசு விரைவு போக்குவரத்து பேருந்திலிருந்து சந்தேகப்படும்படி இறங்கிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தயாராம் (46) என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர்.
அவரிடமிருந்து ஒரு கிலோ ஹெராயின் போதை பொருளை போலீஸார் கைப்பற்றினர். பின்னர் தயாராமை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தயாராம் மத்திய பிரதேசத்தில் இருந்து ஹெராயினை சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு கொண்டு வந்ததும்.
அந்த ஹெராயினை கீழ மணக்குடி ரொனால்டு சதீஷ், ஆனந்த் ஆகியோர் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தயாராமுக்கு தண்டனை வழங்கப்பட்டது. 2வது குற்றவாளியான ரொனால்டு சதீஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி புளோரா இன்று தீர்ப்பளித்தார்.