

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடில் கடலில் கால்வைக்க தயக்கம் காட்டிய மீன்வளத்துறை அமைச்சர்களை தொண்டர்கள் குழந்தைபோல் தூக்கிச் சுமந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முகத்துவாரப் பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் படகில் வந்த அவர் கரையில் இறங்க தயக்கம் காட்டினார். அதனால் அங்கிருந்தவர்கள் ஒரு ஸ்டூலைக் கொண்டு வந்து அமைச்சரை இறங்கச் சொன்னார்கள் ஆனால் அவரோ அதற்கும் தயக்கம் காட்டவே தொண்டர்கள் அவரை அப்படியே தூக்கிக் கொண்டுவந்த கரை சேர்த்தனர்.
இந்த வீடியோ பல்வேறு செய்திச் சேனல்களிலும் வெளியானது. இந்நிலையில் மீன்வளத்துறை முன்னாள் அமைச்சர், "பாவம் திமுக அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம்.. கடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா? மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு" என்று பதிவிட்டுள்ளார்.
இவரைப்போலவே பாஜகவின் எஸ்.ஆர்.சேகரும், அனிதா ராதாகிருஷ்ணனை கிண்டல் செய்யும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.
மனிதனுக்கு
மரியாதையா?
செருப்புக்கு
மரியாதையா?
திமுக அமைச்சர்
அனிதா ராதாகிருஷ்ணனை
பாருங்கள்.
சமூக நீதி
தனி மனித மாண்பு
கௌரவம்
காற்றில் பறக்கவிட்ட
திமுக மந்திரி
என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
நான் யாரையும் தூக்கச் சொல்லவில்லை..
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நான் யாரையும் தூக்கிச் செல்லுமாறு சொல்லவில்லை. என் மீதான அன்பு மிகுதியில் அவர்களே தான் தூக்கிச் சென்றனர் என்று விளக்கமளித்துள்ளார்.