

கரோனா காரணமாக இலங்கைக்குப் பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்கா தம் நாட்டுக் குடிமக்களை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “பூடானில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டுக்கு யாரும் பயணிக்க வேண்டாம். இலங்கையிலும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே, இலங்கைக்கும் பயணிக்க வேண்டாம்.
வெளிநாடுகளுக்குப் பயணிக்க விரும்பும் பயணிகள் நமது நாட்டால் அனுமதி பெற்றுள்ள கரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதனால் நோய் அறிகுறிகள் குறையும். நீங்கள் வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் திட்டம் இருந்தால் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டுத் துறையின் பரிந்துரைகளை அணுகி, தெளிவுபெறுவது நல்லது.
இலங்கை, பூடான், போட்ஸ்வானா, காங்கோ குடியரசு, மலாவி, ருவாண்டா, சியரா லியோன் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகள் கரோனா பாதிப்பு அதிக ஆபத்துள்ள நாடுகளாக தற்போது வரையறுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. எனினும் ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்றது முதல் அங்கு கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தடுப்பூசிகள் பெரும் பங்கு வகித்தன.