Last Updated : 08 Jul, 2021 05:55 PM

 

Published : 08 Jul 2021 05:55 PM
Last Updated : 08 Jul 2021 05:55 PM

பொதுமக்களுக்கான சாலை வடிவமைப்புப் போட்டி; முதல் பரிசு ரூ.1 லட்சம்: திருச்சி மாநகராட்சி

"பொதுமக்களுக்கான சாலை" என்ற தலைப்பில் சாலைகளைப் புதுமையாக வடிவமைக்கும் போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் திருச்சி மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"சீர்மிகு நகரம் என்ற திட்டத்தின் கீழ் மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கான சாலைகளைப் புதுமையாக வடிமைத்துத் தரும் அறிவுத் திறன் போட்டிக்கு, திருச்சி மாநகரம் உட்பட நாடு முழுவதும் 113 மாநகரங்களை மத்திய அரசின் நகர்ப்புற வீட்டு வசதித்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டிக்குத் திருச்சி மாநகரில் கரூர் புறவழி இணைப்புச் சாலை (தில்லை நகர் சாஸ்திரி சாலை போக்குவரத்து சிக்னல் முதல் கலைஞர் அறிவாலயம் வரை) மற்றும் லாசன்ஸ் சாலை (அண்ணா நகர் இணைப்புச் சாலை சந்திப்பு முதல் மத்தியப் பேருந்து நிலையம் வரை) மற்றும் மாவட்ட நீதிமன்றம் முதல் கன்டோன்மென்ட் ஒத்தக்கடை போக்குவரத்து சிக்னல் வரையான சாலை ஆகிய சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு, உள்ளூர் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சாலைகளை வடிவமைக்க வேண்டும்.

சாலைகளைப் புதுமையாக வடிவமைத்துத் தருவோருக்கு தருவோருக்கு (ஒவ்வொரு சாலைக்கும் தனித்தனியாக) முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசாக ரூ.75,000, 3-வது பரிசாக ரூ.50,000 வழங்கப்படும்.

போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் https://smartnet.niua.org/ என்ற வலைதள முகவரிக்குச் சென்று ஜூலை 12-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்".

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x