

விருதுநகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் பிறந்த குழந்தை மாற்றப்பட்டதாக இன்று புகார் எழுந்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரைச் சேர்ந்தவர் சங்கிலி (38) விறகு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (26). கர்ப்பிணியாக இருந்த சுப்புலட்சுமி பிரசவத்திற்காக விருதுநகர் அருகே நந்திக்குண்டில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று மாலை சுப்புலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
அதையடுத்து, மல்லாங்கிணர் அரசு மருத்துவமனையில் சுப்புலட்சுமி சேர்க்கப்பட்டார். சுப்புலட்சுமி உடல் மெலிந்திருந்ததால் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இன்று காலை சுப்புலட்சுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அப்போது, அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே காத்திருப்போர் அறையில் இருந்த அவரது தாய் ராமாயி (55) என்பவரிடம் செவிலியர் ஆண் குழந்தை பிறந்ததாக கூறியதாக கூறப்படுகிறது.
பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்த சங்கிலியிடம் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ராமாயி கூறியுள்ளார். ஆனால், சற்று நேரத்தில் வந்த செலிவியர்கள் சுப்புலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், அதன் கை, கால் விரல்கள் ஒட்டிய நிலையில் சற்று குறைபாட்டுடன் பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக செலிவியர்கள் சிலர் முதலில் கூறியதாகவும், பின்னர் குழந்தை மாற்றப்பட்டுள்ளதாகவும் சங்கிலி புகார் தெரிவித்தார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, சங்கிலி கூறுகையில், அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்த செவிலியர்கள் ஆண் குழந்தை பிறந்ததாக எனது மாமியாரிடம் கூறியுள்ளனர். ஆனால், நான் வந்த பின்னர் சற்று நேரத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறினர்.
அக்குழந்தை சற்று ஊனத்துடன் பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்ததாக முதலில் கூறியதால் நாங்கள் உறவினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்துவிட்டோம். இப்போது, சுப்புலட்சுமிக்குப் பிறந்தது பெண் குழந்தைதான் என்கிறார்கள். குழந்தை மாற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுபற்றி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பதாகத் தெரிவித்தார்.
மருத்துவர்கள் கூறியபோது, விருதுநகர் அரசு மருத்துவமனையில் இன்று காலை 2 பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. முதலில் 10.55 மணிக்கு ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை செலிவியர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் வெளியே வந்து தெரிவித்துள்ளனர். பின்னர், 11.21மணிக்கு சுப்புலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், முதலில் ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவித்ததை, சுப்புலட்சுமியின் தாய், தனது மகளுக்குத்தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது எனக் கருதி மற்றவரிகளிடம் தெரிவித்திருக்கலாம் என்றனர்.