

ஹைதராபாத்தைச் சேர்ந்த 70 வயது ஸ்ரீனிவாஸ் ராவ், இந்த வயதிலும் தேவையுள்ளவர்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்களைச் சைக்கிளில் சென்று விநியோகம் செய்து வருகிறார்.
ஸ்ரீனிவாஸ் ராவ் ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். பணிக்கால ஓய்வுக்குப் பிறகு வீட்டில் இருக்க விரும்பாமல், பிறருக்கு உதவ ஆசைப்பட்டார். சைக்கிளிங் மீதும் அவருக்கு அலாதியான ஆர்வம் இருந்தது. இரண்டையும் ஒரு புள்ளியில் இணைக்க ஸ்ரீனிவாஸ் ராவ் முடிவு செய்தார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறும்போது, "ஹைதராபாத் ரிலீஃப் ரைடர்ஸ் என்னும் அமைப்பு பொதுமக்களுக்கு சைக்கிளிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. அந்த அமைப்பில் நானும் இணைந்துகொண்டேன். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் எங்கள் அமைப்பு சார்பில், தேவையுள்ள மக்களின் வீடுகளுக்கே சென்று மளிகை, காய்கறிகள் அல்லது மருந்துகளை எடுத்துச் சென்று அவற்றை வழங்கி வருகிறோம்.
அந்த வீடுகளுக்கு சைக்கிள் மூலமாக மட்டுமே பொருட்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். தேவையுள்ள மனிதர்களுக்கு உதவ மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.
அதேபோல சுற்றுச்சூழலில் தற்போது ஏற்படும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் குறைவான தூரம் கொண்ட இடங்களுக்காவது சைக்கிளைப் பயன்படுத்த மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்" என்று ஸ்ரீனிவாஸ் ராவ் தெரிவித்தார்.