தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி; உலகத் தரம் வாய்ந்த சிந்தடிக் மைதானம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். உடன் ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர்.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். உடன் ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர்.
Updated on
1 min read

தஞ்சாவூர், திருவாரூர், கோவை ஆகிய இடங்களில் உலகத் தரம் வாய்ந்த சிந்தடிக் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.6.14 கோடியில் கட்டப்படும் உள்விளையாட்டு அரங்கை இன்று (ஜூலை 7) மாலை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:

''ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தமிழகத்தில் இருந்து 11 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்குத் தலா ரூ.5 லட்சம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள எந்தவொரு கிராமத்திலும் விளையாட நினைக்கும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அந்த கிராமத்திலேயே அமைத்துக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தேவையான பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவர். தமிழக முதல்வர் மூலம் விளையாட்டுத் துறையானது முத்திரை பதிக்கும் துறையாக மாற்றப்படும். தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும்.

சென்னையில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்கப்படும். கிராமப் புறங்களில் கபடி, கிரிக்கெட் மைதானங்கள் உருவாக்கப்படும். கரோனா முதல் அலையைக் கட்டுப்படுத்த அதிமுக அரசு ஓராண்டை எடுத்துக்கொண்டது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைச் சமாளித்து 2-வது அலையை 45 நாட்களுக்குள் திமுக அரசு கட்டுப்படுத்திவிட்டது.

திருப்பூரில் ரூ.9 கோடியில் சிந்தடிக் டிராக் அமைக்கும் பணியைத் தமிழக முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். மேலும், தஞ்சாவூர், திருவாரூர், கோவை ஆகிய இடங்களில் உலகத் தரம் வாய்ந்த சிந்தடிக் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.''

இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in