

விளிம்பு நிலை மக்கள் அதிகம் வசிக்கும் வடசென்னையில் ஸ்ட்ரீட் விஷன் அறக்கட்டளை இலவச ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியுள்ளது.
விளிம்பு நிலை மக்கள் அதிகம் வசிக்கும் யானைக்கவுனி, மூர் மார்க்கெட், பள்ளம், உப்பளம், எம்.எஸ்.நகர், எழில் நகர், ஜட்காபுரம் உள்ளிட்ட பத்துப் பகுதிகளில் சாலைகளில் குடியிருப்பவர்களின் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்விச் சேவை அளித்துவரும் அமைப்பு ‘ஸ்ட்ரீட் விஷன்’ அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையினர் சார்பாக அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட சிறார் பாதுகாப்பு அதிகாரி ரமேஷ், சென்னைப் பெருநகர மாநகராட்சி வளர்ச்சிக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆஷா பரேக் நந்தினி, ஹெல்ப் ஏஜ் இந்தியாவின் முதுநிலை மேலாளர் முத்துகிருஷ்ணன் ரங்கராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஸ்ட்ரீட் விஷன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சீதா தலைமை உரையும், இயக்குநர் சுந்தரி சிறப்புரையும் ஆற்றினர். விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டது.