

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட திருச்சி கல்லூரிப் பேராசிரியர் பால் சந்திரமோகன் இன்று (ஜூலை 7) கைது செய்யப்பட்டார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் பால் சந்திரமோகன் (55). தமிழ்த் துறைத் தலைவராக இருந்த இவர் மீது, கல்லூரியின் தமிழ்த் துறை முதுகலை மாணவிகள் 5 பேர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
இதுகுறித்துக் கல்லூரியின் உள் விசாரணைக் குழு, விசாரணை நடத்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில், பால் சந்திரமோகனை அண்மையில் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. எனினும் அவரைக் கைது செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.
இதனிடையே, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரித்தா, மாவட்டச் சமூக நல அலுவலர் தமீமுன்னிசா உட்பட 7 பேர் அடங்கிய விசாரணைக் குழுவினர் , கல்லூரி நிர்வாகம் மற்றும் பால் சந்திரமோகன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணைக் குழுவின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸார் பால் சந்திரமோகன் மீது புகார் அளித்த மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, திருச்சி மாவட்டச் சமூக நல அலுவலர் தமீமுன்னிசா அளித்த புகாரின் பேரில், கல்லூரிப் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இன்று காலை பால் சந்திரமோகனைக் கைது செய்தனர்.