

கொடைக்கானலில் திறக்கப்பட்ட சுற்றுலாத்தலங்களான பிரையண்ட்பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ்கார்டன் ஆகியவை இருதினங்களுக்கு பிறகு நாளை முதல் (ஜூலை 7) மீண்டும் மூடப்படுகிறது.
கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியதைடுத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 75 தினங்களுக்கு பிறகு நேற்று தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான சுற்றுலாத்தலங்களான பிரையண்ட்பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஸ் கார்டன் ஆகியவை திறக்கப்பட்டன.
பூங்காவிற்கு வந்த சுற்றுலாபயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்து தோட்டக்கலைத்துறையினர் வரவேற்பும் கொடுத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடைபெறாதநிலையில் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை காண சுற்றுலாபயணிகள் தந்தனர். கடந்த இருதினங்களில் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிகத்தொடங்கியது.
கொடைக்கானலில் உள்ள படகுசவாரி, குணாகுகை, தூண்பாறை, மோயர்பாய்ண்ட், கோக்கர்ஸ்வாக் ஆகிய சுற்றுலாத்தலங்கள் திறக்கப்படாதநிலையில் பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டதால் கொடைக்கானல் வந்த சுற்றுலாபயணிகள் முழுவதுமாக பூங்காக்களில் குவியத்தொடங்கினர். இதனால் கரோனா விதிமுறைகளான சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவற்றை செயல்படுத்த முடியாதநிலை ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாபயணிகள் ஒரே இடத்தில் குவிவதால் கரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவரவே, பூங்காக்கள் திறப்பை
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மறுபரிசீலனை செய்தது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்பேரில் கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன் திறக்கப்பட்ட பூங்காக்களை மூட உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த இருதினங்களாக சுற்றுலாபயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட பிரையண்ட்பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ்கார்டன் ஆகியவை மூடப்பட்டது.
பேருந்து போக்குவரத்து கொடைக்கானலுக்கு வழக்கம்போல் இருக்கும் என்பதால் சுற்றுலாபயணிகள் கொடைக்கானல் செல்ல தடைஏதும் இல்லை. ஆனால் அவர்கள் சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல முடியாதசூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பூங்காக்கள் மூடலால் சுற்றுலாபயணிகள் மட்டுமல்லாது சுற்றுலாபயணிகளை எதிர்பார்த்து காத்திருந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்க நினைத்த கொடைக்கானல் வாழ் மக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.