Last Updated : 06 Jul, 2021 05:42 PM

 

Published : 06 Jul 2021 05:42 PM
Last Updated : 06 Jul 2021 05:42 PM

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு; எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல்: மோட்டார் தொழிலாளர்கள் வேதனை

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல் போன்றது என்று மோட்டார் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

"பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வைக் குறைக்கும் வகையில் கலால் வரியைக் குறைக்கவும், பெட்ரோல்- டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோட்டார் வாகனக் காப்பீடு கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான கடன் மாதத் தவணை, எஃப்சி, காப்பீடு ஆகியவற்றைச் செலுத்தக் கால அவகாசம் வழங்க வேண்டும். மோட்டார் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் - உரிமையாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநகர மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் வீரமுத்து, ஸ்ரீதர், கருணாநிதி, பாலச்சந்தர், மணிகண்டன், வெங்கடாசலம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இது தொடர்பாக மோட்டார் தொழிலாளர்கள் கூறும்போது, "கரோனா ஊரடங்கு காரணமாகப் பல்வேறு வகையான மோட்டார் வாகனங்களை இயக்க முடியாமல் மோட்டார் தொழிலாளர்களும், அவற்றைச் சார்ந்த தொழிலாளர்களும், வாகன உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடன் தவணை செலுத்தாத காரணத்தைக் காட்டி வாகனங்களைப் பறிமுதல் செய்ய நிதி நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. சாலை வரி, வாகன காப்பீடு, எஃப்சி ஆகியவற்றுக்குக் கால அவகாசம் அளிக்கவில்லை.

பெட்ரோல்- டீசல் - காஸ் விலை உயர்த்தப்பட்டு வருவது ஏற்கெனவே வேதனையில் தவிக்கும் மோட்டார் தொழிலாளர்களுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயலைப்போல் உள்ளது. எனவே, மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல்- டீசல் - காஸ் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x