Last Updated : 06 Jul, 2021 04:45 PM

 

Published : 06 Jul 2021 04:45 PM
Last Updated : 06 Jul 2021 04:45 PM

கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைப் பிரிவு தொடக்கம்: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்

கோவை அரசு மருத்துவமனையில் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் சிகிச்சை பெறலாம்.

கோவை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்குப் பிந்தைய சிகிச்சைப் பிரிவு, புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று (ஜூலை 6) தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தாய்மார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:

’’கரோனா தொற்றுக்குப் பிந்தைய சிகிச்சைப் பிரிவில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஒரு மருத்துவர், செவிலியர், இயன்முறைப் பயிற்சி அளிப்பவர், மனநல மருத்துவர், சிகிச்சை உதவியாளர்கள் ஆகியோர் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பணியாற்றுவார்கள்.

கரோனா பாதிப்புக்குப் பின்பு சர்க்கரையின் அளவு அதிகரிப்பு, அதிக ரத்த அழுத்தம், மூச்சு விடுவதில் சிரமம், தொடர் இருமல், சுவையின்மை, வாசனையின்மை, ஸ்டீராய்டு மருந்து சார்ந்த பிரச்சினைகள், பசியின்மை, உடல் எடை குறைதல், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவோர் இங்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இங்கு நேரடியாக ஆலோசனை பெறவும், தேவைப்பட்டால் உள் நோயாளியாகச் சிறப்பு சிகிச்சை பெறவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், எக்மோ எனும் உயிர் காக்கும் கருவி ரூ.30 லட்சம் செலவில் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. நிமிடத்துக்கு 400 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ரூ.75 லட்சம் மதிப்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களில் 130 பாலூட்டும் தாய்மார்களுக்குக் கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கர்ப்பம் தரித்த 1-ம் மாதம் முதல் 9-ம் மாதம் வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்’’.

இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x