

கோவை மருதமலை அருகே நாட்டுத் துப்பாக்கியால் காட்டுப் பன்றியைச் சுட்டுக்கொன்ற 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைகள், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கரோனா தொற்றுப் பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் முயல், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது கோவையில் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று (ஜூலை 4) இரவு மருதமலை சட்டக் கல்லூரி அருகே உள்ள ஐஓபி காலனி பகுதியில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் சென்று பார்த்தபோது, துப்பாக்கியால் சுடப்பட்டு காட்டுப்பன்றி ஒன்று உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. பொதுமக்கள் வருவதைப் பார்த்த நான்கு பேர், அங்கிருந்து காரில் தப்ப முயன்றனர். அவர்களைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் 4 பேரையும் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், காட்டுப் பன்றியை வேட்டையாடியது கோவை சின்னதடாகத்தைச் சேர்ந்த பி.சசிகுமார் (47), முல்லை நகரைச் சேர்ந்த ராஜ்குமார் (43), கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்த ஏ.ஜி.சம்பத்குமார் (39), திருச்செங்கோட்டைச் சேர்ந்த தேவராஜ் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.