

அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி - ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பேருந்தை ஓட்டி, இயக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், ஆனந்தவாடி கிராமத்திலிருந்து இரும்புலிக்குறிச்சி, உடையார்பாளையம் வழித்தடத்தில் ஜெயங்கொண்டம் சென்று வரும் வகையில், கூடுதல் அரசு பேருந்தை இன்று (ஜூலை 5) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொடங்கிவைத்து, பேருந்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார்.
இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.