

கரோனா தளர்வை அடுத்து புதுச்சேரி- டெல்லி நேரடி ரயில் சேவை, வரும் 11-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.
கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு புதுவையில் இருந்து படிப்படியாக ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுவையில் இருந்து சென்னைக்கு தினசரி 2 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தாதர், ஹவுரா, புவனேஸ்வர், மங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய வாராந்திர ரயில்களும் இயக்கப்படுகின்றன. புதுவையில் இருந்து டெல்லிக்கு நேரடி ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் புதுவையில் இருந்து டெல்லிக்கு நேரடியாகச் செல்லும் அதி விரைவு சிறப்பு ரயில், வாரம்தோறும் விடப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி டெல்லியில் இருந்து வருகிற 11-ம் தேதி நள்ளிரவு 11.15 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் மதுரா, ஆக்ரா, ஜான்சி, போபால், நாக்பூர், விஜயவாடா, வாரங்கல், சென்னை எழும்பூர், விழுப்புரம் வழியாக 13-ம் தேதி மதியம் 1.15 மணிக்குப் புதுவை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. மறுநாள் 14-ம் தேதி காலை 9.50 மணிக்குப் புதுவையில் இருந்து புறப்படும் ரயில் 17-ம் தேதி நள்ளிரவு டெல்லியை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.