

புதுக்கோட்டை மாவட்டம் முனசந்தை கிராமத்தில், மரக்கன்று, மூலிகைகளைப் பாதுகாக்க ஆடுகள் வளர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் யூகலிப்டஸ் காடுகள் நிறைந்த அரிமளம் வட்டாரத்தில் அமைந்துள்ள முனசந்தை கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
கண்மாய் மற்றும் கிணற்றுப் பாசனத்தைக் கொண்டு முப்போகமும் விளைவிக்கப்படும் இந்த= கிராமத்தில் உள்ள தனியார் மற்றும் பொது இடங்களில் அடர்ந்த காடு போன்று காணப்படும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகைப் பயிர்களைப் பாதுகாப்பதற்காக ஆடுகள் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முனசந்தை கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பி.வேலாயுதம் கூறியதாவது:
''இந்த கிராமத்தில் ஆண்டுக்கு முப்போகமும் நெல் விளைவிக்கப்படுவதோடு, இடையிடையே சிறு தானியங்களும் பயிரிடப்படுகின்றன. கண்மாய்களில் போதிய அளவு மழை நீர் தேக்கி வைக்கப்படுவதால் சுமார் 30 அடியிலேயே தண்ணீர் கிடைக்கிறது. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பலவகையான மரக்கன்றுகள், மூலிகைப் பயிர்களை ஆடுகள் மேய்ந்துவிடுவதாலும், மரக்கிளைகளை முறித்து ஆடுகளுக்கு தீவனமாகப் போட்டுவிடுவதாலும் ஆடுகளை வளர்க்க கிராமத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டது.
அரசு சார்பில் வழங்கப்பட்ட வெள்ளாடுகளையும் பராமரித்து விற்றுவிட்டதால் தற்போது ஊருக்குள் ஆடுகளே இல்லை. இந்த உத்தரவை அனைத்துப் பொதுமக்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இதற்கு மாற்றாகக் கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். இங்கு தினமும் 250 லிட்டருக்குக் குறையாமல் பால் கறந்து ஆவினுக்கு அனுப்பப்படுகிறது. பசுமாடு வளர்க்கத் தொடங்கியதில் இருந்து, பாரம்பரியச் சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆடு வளர்ப்பு நின்ற பிறகு ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதுதவிர, பறவைகள், விதைப் பந்துகள் மூலமும் ஏராளமான மரக்கன்றுகள் வளர்ந்து வருவதால் காடுகள் பாதுகாக்கப்படுவதோடு, சாகுபடி பயிருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இங்குள்ள மயானப் பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பே குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையை பாதுகாப்பதில் முன்னோடி கிராமமாக முனசந்தை விளங்குவது பெருமையாக உள்ளது''.
இவ்வாறு இயற்கை விவசாயி பி.வேலாயுதம் தெரிவித்தார்.