Last Updated : 29 Jun, 2021 06:22 PM

 

Published : 29 Jun 2021 06:22 PM
Last Updated : 29 Jun 2021 06:22 PM

புதுக்கோட்டையில் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயகத் தூய்மைப் பணியாளர்கள்.

புதுக்கோட்டை

நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஜனநாயகத் தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் இன்று (ஜூன் 29) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் சுமார் 200 துப்புரவுப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குக் கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும், அவதூறாகப் பேசும் தூய்மைப் பணி ஆய்வாளர்கள் 3 பேரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆட்சியரிடம் அண்மையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

எனினும், கோரிக்கைகள் நிறைவேறாததை அடுத்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஜனநாயகத் தூய்மைப் பணியாளர் சங்கத்தின் தலைவர் கசி விடுதலைக்குமரன் தலைமையில் இன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில், ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர், புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா, நகராட்சிப் பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனைத்துக் கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்துப் போராட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x