

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் அவற்றைப் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் பொதுமக்கள் மாலைநேரங்களில் இம்மலைப்பகுதிக்கு தனியே வரவேண்டாம் என வனத்துறை கூறியிருக்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சிமலை அருகே கைலாசநாதர் மலைக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு சிறுத்தை நடமாடுவதாக சமூகவலைதளங்களில் வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து தென்கரை பேரூராட்சி நிர்வாகத்தினர் தோட்டம் மற்றும் கோயில் பகுதிக்கு தனியே செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிலையில் இன்று தேனி வனச்சரகர் சாந்தகுமார் தலைமையிலான வனத்துறை யினர் இங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்பு வனசரகர் சாந்தகுமார் கூறுகையில், கண்காணிப்புக் கேமராவில் இதுவரை மான், பன்றி, காட்டுமாடு போன்ற விலங்குகளின் நடமாட்டமே பதிவாகி உள்ளது.
சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் அவற்றைப் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் பொதுமக்கள் மாலைநேரங்களில் இம்மலைப்பகுதிக்கு தனியே வரவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
2017-ம் ஆண்டு இங்கு நடமாடிய சிறுத்தையைப்பிடித்து குமுளி அருகே கண்ணகி கோயில் மலைப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.