Last Updated : 23 Jun, 2021 03:15 PM

 

Published : 23 Jun 2021 03:15 PM
Last Updated : 23 Jun 2021 03:15 PM

பெட்ரோல் - டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்: போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்

திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்.

திருச்சி

பெட்ரோல் - டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியது.

பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி, திருச்சியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம் முன் இன்று (ஜூன் 23) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தொகுதிச் செயலாளர்கள் விஜயபூபாலன், சோழசூரன், கோபி, அழகுசுந்தரம், செல்லப்பிள்ளை, பாபு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் வினோத், சுபகண்ணன், வீரத்தமிழர் முன்னணி மாநிலச் செயலாளர்கள் நூர்ஜகான், பிரபு தனபால், மகளிர் பாசறை மாவட்டச் செயலாளர் லட்சுமி உட்பட 100-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு வானொலி நிலையம் வரை வந்தனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து பிரபு கூறுகையில், "பிரதமராக மோடி பதவியேற்றது முதலே நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்கு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வே முதன்மைக் காரணம்.

2014-ல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ரூ.110 ஆக இருந்தபோது, பெட்ரோல் விலை லிட்டர் ரூ.72.34 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.52.48 ஆகவும் இருந்தன.

தற்போது, கச்சா எண்ணெய் விலை பேரல் ரூ.71 ஆக உள்ள நிலையில், பெட்ரோல் லிட்டர் ரூ.99-க்கும், டீசல் லிட்டர் ரூ.91-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி மட்டும் ரூ.60.

அண்டை நாடுகளில் பெட்ரோல் - டீசல் விலை குறைவாக உள்ள நிலையில், இந்தியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் - டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து, ஏழை - எளிய மக்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பெட்ரோல் - டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய, மாநில அரசுகள் வரியைக் குறைத்து, பெட்ரோல் - டீசல் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x