Published : 21 Jun 2021 07:09 PM
Last Updated : 21 Jun 2021 07:09 PM
வேலூர் அருகே கன்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்துள்ள பாஸ்மார்பெண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (36). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி காமாட்சி (30), மகன்கள் சரண் (6), விண்ணரசன் (4). இவர்கள் காட்பாடி அடுத்துள்ள வள்ளிமலை கிராமத்தில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தனர். அங்கிருந்து கட்டிடப் பணிகளுக்காக ராஜா சென்று வந்தார்.
இதற்கிடையில், பாஸ்மார்பெண்டா கிராமத்தில் நாளை (ஜூன் 22) திருவிழா நடைபெறுவதாக இருந்தது. இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக ராஜா தனது மனைவி மற்றும் மகன்களுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் இன்று பிற்பகல் புறப்பட்டுள்ளார். வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது ஒரு மகனும், பின்னால் மகன் மற்றும் மனைவியுடன் ராஜா சென்று கொண்டிருந்தார்.
பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே வேகமாகச் சென்றபோது எதிர் திசையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மைதா மூட்டைகளுடன் சென்ற கன்டெய்னர் லாரியின் முன்புறம் நேருக்கு நேர் மோதியுள்ளார். இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டதில் ராஜா, காமாட்சி மற்றும் சரண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் விண்ணசரன் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் வெங்கடேசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும், விபத்து தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்டெய்னர் ஓட்டுநர் முருகன் (35) என்பவர் கைது செய்யப்பட்டார்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் வேலூர் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment