Published : 17 Jun 2021 09:55 PM
Last Updated : 17 Jun 2021 09:55 PM

வயிற்றில் சிக்கிக் கொண்ட முகக்கவசம்: உயிருக்குப் போராடிய நாயைக் காப்பாற்றிய மதுரை அரசு கால்நடை மருத்துவர்

நாயின் வயிற்றில் சிக்கிக் கொண்ட முகக்கவசத்தை அகற்றி அதன் உயிரை மதுரை அரசு கால்நடை மருத்துவர் காப்பாற்றியுள்ளார்.

மதுரை பழங்காநத்தம் அருகேயுள்ள நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் குரு. இவரது வீட்டில் வளர்ந்து வந்த இரண்டரை வயதுடைய புருனோ என்ற லேப்ரடார் இன நாயானது கடந்த 9 நாட்களாக உடல்நலம் குன்றிய நிலையில் உணவு சாப்பிடாமல் சோர்வாக இருந்துள்ளது. இதனையடுத்து அவர் அரசு கால்நடை மருத்துவரான கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த மெரில்ராஜ் என்பவரை தொடர்புகொண்டுள்ளார்.

ஆனையூர் பகுதியிலுள்ள அரசு மருத்துவருக்கு சொந்தமான கால்நடை மருத்துவமனையில் வைத்து நாயின் உடலை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது நாயின் வயிற்றில் மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய துணியால் ஆன முகக்கவசத்தை விழுங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனாலேயே உணவுக்குழாய்க்கு உணவு செல்லாத காரணத்தால் நாய் உணவு உண்ண முடியாத நிலையில் இருந்துள்ளது. உடனே துரிதமாக அரசு மருத்துவர் மேற்கொண்ட வாய்வழி வெளியேற்ற சிகிச்சை மூலமாக குளூகோஸ் வாய்வழியாக செலுத்தபட்டு அதன் மூலமாக முகக்கவசம் முழுவதுமாக அகற்றப்பட்டது. தற்போது நாய் தற்போது மீண்டும் உற்சாகமாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.

இதுகுறித்து மருத்துவர் மெரில்ராஜ் கூறுகையில், ‘‘மக்கள் தங்கள் முகத்தில் அணிந்த முகக்கவசங்களை அலட்சியமாக சாலைகளில் வீசி செல்கின்றனர். அவற்றை நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளும், கால்நடைகளும் விழுங்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளன.

அதனால், மக்கள் பொறுப்புணர்வுடன் இருந்து முகக்கவசங்களை சாலைகளில் வீசிச் செல்லாமல் பாதுகாப்பாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற வளர்ப்புப் பிராணிகள் சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x