

கோவை அரசு மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தடுப்பூசி போடும் பணி இன்று (ஜூன் 17) முதல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மத்திய அரசு பாலூட்டும் தாய்மார்களுக்குத் தடுப்பூசி போட அனுமதி அளித்தது. இந்நிலையில், அவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, கோவை அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறும்போது, ’’கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் 15-ம் தேதி வரை கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் கரோனா பாதித்த 568 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், 290 பேருக்கு இங்கேயே பிரசவம் நிகழ்ந்துள்ளது. 42 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்றால் பாதிக்கப்பட்டுப் பிரசவித்தவர்களுக்கு தடுப்பூசி போட இயலாது. அவர்கள் 3 மாதங்கள் கழித்துத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
ஆனால், தொற்று பாதிக்காத தாய்மார்கள் பிரசவித்த இரண்டாவது நாளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் இன்று 19 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்களுக்கும், அவர்களின் குழந்தைக்கும் தொற்று பாதிப்பதைத் தவிர்க்க முடியும்.
தடுப்பூசி போட்டபிறகு, ஒருநாள் முழுவதும் மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கடந்த டிசம்பர் முதல் பிரசவித்த அனைவருக்கும் தடுப்பூசி போட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையயங்கள் மூலம் தடுப்பூசி போடப்படும்” என்று தெரிவித்தார்.