

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து வெளியேறும் வண்டுகளால், மக்கள் வீடுகளில் குடியிருக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
காரைக்குடியில் திருச்சி சாலை புதிய அரசு மருத்துவமனை அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான கிடங்கு உள்ளது. இங்கிருந்து காரைக்குடி வட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்குப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுகின்றன.
இங்கு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்றவை சேமித்து வைக்கப்படுவதால் வண்டுகள் உருவாகின்றன. அவை காரைக்குடி நகரின் விரிவாக்கப் பகுதியான முத்து நகர், அய்யப்பா நகர், ஆவுடை பொய்கை சாலையில் உள்ள புதிய குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து மக்களைத் தொல்லைப்படுத்தி வருகின்றன.
சில சமயங்களில் வண்டுகள், சிறுவர்கள் காதுக்குள் நுழைந்துவிடுவதால், மருத்துவர்களை நாட வேண்டிய நிலை உள்ளது. சமைக்கும்போது உணவுப்பொருட்களிலும் விழுவதால் சாப்பிட முடியாத நிலை உள்ளது. மேலும், தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்டுகள் ஒவ்வொரு வீட்டிலும் படிகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, முத்துநகர் பகுதி மக்கள் கூறுகையில், "வண்டுகளால் எங்களால் நிம்மதியாக வசிக்க முடியவில்லை. இதனால், எப்போதும் வீடுகளின் ஜன்னல், கதவுகளை மூடியே வைத்துள்ளோம். தினமும் தூங்க முடியாமல் தவிக்கிறோம். வண்டுகள் குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. வண்டுகளின் பெருக்கத்தைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.