

தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் அரியலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களாக மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழகத்தில், கரோனா வைரஸ் இரண்டாம் அலைப் பரவலைத் தடுக்கும் விதமாக, கடந்த மே மாதத்தில் தமிழகத்தில் அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்குத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதித்தது. தஞ்சை மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் திருமானூர், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தஞ்சை, திருவையாறு, கபிஸ்தலம், கும்பகோணம், பாபநாசம் மற்றும் அப்பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் கடந்த இரண்டு நாட்களாகக் காலை 7 மணி முதலே டாஸ்மாக் கடைகளை நோக்கிப் படையெடுத்து, ஆக்கிரமித்துள்ளனர்.
கொள்ளிடத்தின் குறுக்கே திருமானூர், தா.பழூர் பகுதிகளில் பாலங்கள் உள்ள நிலையில், அவ்வழியாக வந்து செல்வோரைக் காவல்துறையினர் கண்காணித்ததால், பலரும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி, குறுக்காக நடந்துவந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
திருமானூர் கொள்ளிடம் கரையோரங்களில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கடைகளுக்கு வருவோர் முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்றிச் செல்கிறார்களா என போலீஸார் கவனித்தனர். மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுப்பிரியர்களை வரிசையாக நிற்கவைத்து ஒவ்வொருவராக மதுபானங்களைப் பெற்றுச் செல்ல அறிவுறுத்தினர்.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று மதியத்துக்கு மேல் பெரும்பாலான கடைகளில் மதுபானங்கள் தீர்ந்துவிட்டன. இதனால், மதுப் பிரியர்கள் பலரும் வரிசையில் நின்றும், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதையடுத்து அனைத்துக் கடைகளுக்கும் நேற்று மாலைக்குப் பிறகு போதுமான மதுபானங்கள் கொண்டுவரப்பட்டன. இரண்டாவது நாளான இன்று அனைத்துக் கடைகளிலும் காலை முதலே கூட்டம் அதிகமாக உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் கரோனா பரவல் அதிக அளவு உள்ளதால் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளிக்காத நிலையில், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் அரியலூர் மாவட்டப் பகுதிகளுக்கு வந்து செல்வது இப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.