

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பலத்த மழையால் காய்கறிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
தமிழகத்தில் நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாகியுள்ளது. அதன்படி காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காரைக்குடியில் கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின்போது, புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி கடைகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியது.
ஆனால் தற்போது புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் வைக்க அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து காய்கறி கடை வியாபாரிகள் நூறடி சாலையின் இருபுறமும் கடைகளை அமைத்தனர். போக்குவரத்து இடையூறாக இருந்தநிலையில், இன்று பகல் 12 மணி முதல் 1 மணி வரை பலத்த மழை பெய்தது.
பாதாளச் சாக்கடை பணி முழுமை அடையாததால், வடிகால் முழுவதும் ஆங்காங்கே அடைப்பட்டுள்ளன. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதை எதிர்பார்க்காத வியாபாரிகள் கடைகளை ஒழுங்குப்படுத்துவதற்குள், தண்ணீரில் காய்கறிகள் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும் மழையில் ரூ.பல ஆயிரம் மதிப்புள்ள காய்கறிகள் வீணாகின. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.