

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் அக்கா, தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், கல்லகம் கிராமத்தைச் சேர்ந்த ஞானமூர்த்தி மகன் மாதவன் (23). இவரும், திருமணமான இவரது அக்கா சர்மிளாவும் (26), கீழப்பழுவூர் அடுத்த கீழகொளத்தூர் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, இன்று (ஜூன் 08) ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கீழப்பழுவூர் அருகே தஞ்சை - அரியலூரில் சாலையில் வந்தபோது, எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் போலீஸார், இருவரது உடல்களையும் மீட்டு, அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.