

விருதுநகரில் பிறந்த ஒரு நாளே ஆன ஆண் குழந்தைக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 40,488 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,128 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுமார் 5 ஆயிரம் பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் வீட்டுத் தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 458 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சாத்தூரைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண்ணுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அக்குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் அக்குழந்தைக்கு கரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டது.
அத்துடன், பிறந்து ஒரு நாளே அக்குழந்தை தனி அறையில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் மீசலூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும், திருத்தங்கலைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவருக்கும், சாத்தூரில் 16 வயது சிறுவன் ஒருவருக்கும், திருத்தங்கலில் 17 வயது சிறுமி ஒருவருக்கும், காரியாபட்டியில் 13 வயது சிறுவன் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.