

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கடந்த 4 நாட்களாக நீடிக்கிறது.
இன்று ஒருசில மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
கரோனா வைரஸ் தொற்று வராமல் இருக்க தற்போது 14 முதல் 44 வயதுக்கு உட்பட்ட பிரிவினரும் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இதனால் தடுப்பூசி மையங்களில் கடந்த வாரத்தில் அதிகளவில் கூட்டம் இருந்தது.
ஆனால் போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல நேரிட்டது. நீண்ட நேரம் காத்திருந்தவர்களுக்கு ஒருசில மையங்களில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டிருந்தது.
அவ்வாறு டோக்கன் பெற்றவர்களுக்கும் அடுத்த நாள் தடுப்பூசி போடமுடியாத நிலையில் தட்டுப்பாடு நிலவியது.
இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பல்வேறு தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தடுப்பூசிபோடும் பணி நடைபெறவில்லை.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி , பெருமாள்புரம் நகர்நல மையம் உள்ளிட்ட ஒருசில தடுப்பூசி மையங்களுக்கு குறைந்த அளவுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் வந்ததை அடுத்து அங்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி முகாம் நேற்று நடத்தப்பட்டிருந்தது. ஓரிரு நாட்களில் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.