தேனி மாவட்டத்திற்கு உரிய பருவத்தில் கிடைத்த பாசன நீரினால் உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

தேனி மாவட்டத்திற்கு உரிய பருவத்தில் கிடைத்த பாசன நீரினால் உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து உரிய நேரத்தில் நீர் திறக்கப்பட்டதால் இருபோக சாகுபடி நடைபெறுவதுடன் உணவு உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது.

இதில் உத்தமபாளையம் வட்டத்தில் 11ஆயிரத்து 807ஏக்கர் நிலங்களும், தேனி வட்டத்தில் 2ஆயிரத்து 412ஏக்கரும், போடி வட்டத்தில் 488ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 14ஆயிரத்து 707ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

நீர்மட்டம் 130அடியை எட்டியதும் முதல்போகத்திற்காக ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இப்பருவத்தில் நீர்மட்டம் உயரவில்லை.

எனவே ஜூலை இறுதி மற்றும் ஆகஸ்ட் துவக்கத்திலே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் இருபோக சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு கோடைமழை மற்றும் புயலினால் ஏற்பட்ட மழையினால் நீர்வரத்து அதிகரித்து 130அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது.

எனவே 14ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த முதல் தேதியில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் சரியான தருணத்தில் பாசனநீர் கிடைத்ததுடன், இருபோக சாகுபடிக்கும் வாய்ப்பு உள்ளது.

பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறுஅணை மூலம் சுமார் 2ஆயிரத்து 259 ஏக்கர்நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த அணை முழுக்கொள்ளவை எட்ட உள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதுடன் பாசனத்திற்கும் விரைவில் நீர் திறக்கப்பட உள்ளது.

இதேபோல் மாவட்டத்தில் சோத்துப்பாறை, சண்முகாநதி அணைகளுக்கு நீர்வரத்து சீராக உள்ளதால் விவசாயத்திற்கான பாசனநீர் உரிய அளவில் கிடைக்கும் நிலை உள்ளது. நிலத்தடிநீரும் பரவலாக உயர்ந்துள்ளது.

இத்துடன் தற்போதைய கோடைமழையினால் மானாவாரி பயிர் சாகுபடியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மாவட்டத்தில் நெல் மற்றும் இதர உணவுப் பொருள் உற்பத்தி அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பல ஆண்டுகளுக்குப்பிறகு அணைகளில் இருந்து சரியான பருவத்திற்கு நீர்திறக்கப்பட்டுள்ளது. மேலும் கோடை மழையும் போதுமான அளவு பெய்துள்ளதால் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன் மானாவாரி விவசாயமும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இதனால் நெல், சோளம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in