

"அதிமுக கட்டாயம் சசிகலா தலைமையில் தான் இயங்கும். பழனிசாமி சரித்திர விபத்தால், ஏதோ ராஜயோகத்தால் முதல்வராக வந்தவர். அவரது காலக்கட்டம் முடிந்துவிட்டது" என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது வரை தினமும் 20 ஆயிரம் பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஊரடங்கை நீட்டிப்பது தான் சரியான முறை.
தடுப்பூசி பற்றாக்குறைக்கு பிரதமர் மோடி மட்டும் தான் காரணம். இதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. தடுப்பூசியை கொள்முதல் செய்வது மத்திய அரசு தான். இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம் தான். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
கரோனா சமயத்தில் தேர்தலையே நடத்திவிட்டோம். பிளஸ் 2 தேர்வை நடத்துவது தான் சாதுர்யம்.
அதிமுக கட்டாயம் சசிகலா தலைமையில் தான் இயங்கும். பழனிசாமி சரித்திர விபத்தால், ஏதோ ராஜயோகத்தால் முதல்வராக வந்தவர். அவரது காலக்கட்டம் முடிந்துவிட்டது, என்று கூறினார்.