

சிவகங்கையில் சிறப்பு எஸ்.ஐ ஒருவர், பாட்டு பாடி, கை கூப்பி சாலையில் சுற்றித்திரிவோரை கெஞ்சி வீட்டிற்கு அனுப்பி வருகிறார்.
சிவகங்கை மாவட்ட குற்றப்பதிவேடு பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக இருப்பவர் கண்ணன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சிவகங்கை நகர் போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்தார்.
அவர் போக்குவரத்தை சரிசெய்யும்போது, பணியை மட்டும் செய்யாமல், விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம். மேலும் வாகன ஓட்டிகளிடம் கடிந்து கொள்ளாமல் அன்பாக அறிவுரை கூறுவார்.
இதனால் பலரும் போக்குவரத்து விதிமுறை கடைபிடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சிவகங்கை நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிவோரிடம், ‘சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. ஆனா வட்டம் போடும் ஒரு கூட்டம் கூடிக் கொண்டே இருக்குது....மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால் கரோனாவை ஒழிக்க முடியாது,’ என்ற பாடலை மைக்கில் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
மேலும் வாகன ஓட்டிகளிடம் கை கூப்பி கெஞ்சியும் வீட்டிற்கு அனுப்பி வருகிறார். அவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.