

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கும் பணியை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாலம்பாள்புரம் துணைமின் நிலையத்தில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த மின்பாதை மூலம் பலவிதமான நுகர்வோர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படுவதால் அடிக்கடி மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனைச் சரி செய்யும்வகையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு எஸ்.வெள்ளாளப்பட்டி துணைமின் நிலையத்தில் இருந்து 24 மணி நேரத் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் சுமார் ரூ.1.5 கோடியில் 3.2 கி.மீட்டர் தூரத்திற்கு புதிய உயரழுத்த மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.வெள்ளாளப்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்குவதை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியையும் அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கரூர் எம்.பி. செ.ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.