

பாளை சிறையில் கைதிகள் மோதலில் கொலை செய்யப்பட்ட கைதியின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரி தாக்கலான மனு உயர் நீதிமன்ற கிளை முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
நெல்லை வாகைக்குளத்தைச் சேர்ந்த பாவனாசம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது மகன் முத்து மனோ (27), கொலை மிரட்டல் வழக்கில் களக்காடு போலீஸாரால் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏப். 22-ல் முத்து மனோ சக கைதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கொலை நடைபெறுவதற்கு முன்பு வரை முத்து மனோ ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பாளை சிறைக்கு மாற்றிய நாளில் அவர் கொலை செய்யுப்பட்டுள்ளார். அவரை பாளை சிறைக்கு மாற்றியதில் உள்நோக்கம் உள்ளது.
முத்து மனோ கொலை தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும், சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ.2 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனுதாரரின் மற்றொரு வழக்கு தனி நீதிபதி முன்பு நிலுவையில் உள்ளதால், இதனால் இந்த வழக்கை முதன்மை அமர்வுக்கு மாற்ற பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது என்று கூறி அடுத்த விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.