

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆலங்காயம் சுகாதார மேற்பார்வையாளர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி டவுன் காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாரூக் பாட்ஷா (55). இவர், ஆலங்காயம் சுகாதார மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். கரோனா முதல் அலை மற்றும் 2-ம் அலையின்போது கரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 18-ம் தேதி காய்ச்சல் காரணமாக, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றபோது அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அதே மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த பாரூக் பாட்ஷாவின் உடல் நிலை மோசடைந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 29-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த பாரூக் பாட்ஷா சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூன் 02) உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, அவரது உடல் வாணியம்பாடிக்குக் கொண்டு வரப்பட்டு, கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்ட காதர்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சுகாதார மேற்பார்வையாளர் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் சுகாதாரத் துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.