

ஆப்கானிஸ்தானில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடிக்கப்பட்டதில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “நாட்டின் கிழக்குப் பகுதி மாகாணமான நன்கர்ஹரில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று (புதன்கிழமை) காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் பொதுமக்களில் இருவர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தலிபான்கள் மீது அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, செவாய்க்கிழமை இரவு காபூலில் இரண்டு அரசுப் பேருந்துகளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 8 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர்.
ஆப்கனில் அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதைத் தொடர்ந்து அங்கு வன்முறைகள் அதிகரித்து வருவதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தாக்குதலில் 40% மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் குழந்தைகள் மட்டும் 1,600 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தான் பல வருடங்களாகக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான நாடாக இருந்ததில்லை என்று ஐ.நா. கடந்த மாதம் அறிக்கை விட்டிருந்தது.