கரோனா தொற்றால் புளியங்குடி டிஎஸ்பி உயிரிழப்பு: எஸ்.பி., காவல்துறையினர் அஞ்சலி

கரோனா தொற்றால் புளியங்குடி டிஎஸ்பி உயிரிழப்பு: எஸ்.பி., காவல்துறையினர் அஞ்சலி
Updated on
1 min read

கரோனா தொற்றால் புளியங்குடி டிஎஸ்பி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டத்தில் கடந்த 14.9.2020 முதல் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் சுவாமிநாதன்.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், சாத்தூர் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், எஸ்பிசிஐடி டிஎஸ்பி குப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் டிஎஸ்பி சுவாமிநாதன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பி கலிவரதன் டிசிஆர்பி டிஎஸ்பி கணேஷ், நிர்வாக அலுவலர் ஹரிராம், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் டிஎஸ்பி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1997-ம் வருடம் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த சுவாமிநாதன், கடந்த 2020-ம் ஆண்டு துணைக் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு யமுனா என்ற மனைவியும், சஹானா (13), சாதனா (12), சந்தோஷ் (09) என 3 பிள்ளைகள் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in