

இஸ்ரேலில் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் யுலி எடெல்ஸ்டீன் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் மக்களுக்கு மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உணவு விடுதிகள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்களுக்குச் செல்லும் மக்கள் இனி தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழைக் காட்டத் தேவையில்லை. பள்ளிக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் மட்டும் வகுப்புகளில் இருக்கும்போது முகக்கவசம் அணிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்தியதன் காரணமாகவே இந்த நிலையை அடைந்துள்ளோம் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 62% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.